Saturday, July 30, 2016

தினம் ஒரு பாசுரம் - 76

தினம் ஒரு பாசுரம் - 76


நானக் கருங்குழல் தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,
நானித் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்,
தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ் தென் திருப்பேரையில் வீற்றிருந்த,
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே!


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று மற்றுமொரு திருவாய்மொழிப் பாசுரம். இது நம்மாழ்வார் பராங்குச (பராங்குசன் என்பது நம்மாழ்வாருக்கு ஏற்பட்ட காரணத் திருநாமம். அதாவது, பேருவகையோடு கூடிய பரபக்தி என்ற அங்குசத்தால், அந்த மாயக்கண்ணனை  கட்டிப்போட்டவர் என்பதால்!) நாயகி பாவத்தில் தென் திருப்பேரையில் கோயில் கொண்டிருக்கும் மகர நெடுங்குழைக் காதன் என்ற அழகான திருநாமம் கொண்ட (மூலவர்) பெருமாளை மங்களாசாசனம் செய்த பதிகத்தில் உள்ள  திருப்பாசுரம் ஆகும்.  

காலம் சென்ற என் நண்பர் டோண்டு ராகவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்,  அப்பன் மகர நெடுங்குழைக் காதன்  என்பதால், இவ்விடுகை அவர்க்குச் சமர்ப்பணம்.

என் வலை எழுத்து குறித்து, டோண்டு எழுதிய இடுகை இங்கே.

இனி, தென் திருப்பேரை திவ்யதேசம் பற்றிய சிறுகுறிப்பு.

சுமார் 900 ஆண்டுகள் பழமை மிக்க திருத்தலம் இது.  நவதிருப்பதிகளில் ஒன்று.   நவதிருப்பதிகளும் விசேஷமானவை! திவ்விய தேசங்கள் என்பது தவிர்த்து,  நவகிரகங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகின்றன.    அதை விட முக்கியமானது, ஆழ்வார்களில் தலையாய நம்மாழ்வாரும், அவரது சீடரான (கருடாழ்வாரின் அம்சமாக  அவதரித்த) மதுரகவியாழ்வாரும் முறையே அவதரித்த திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) மற்றும்  திருக்கோளூர் ஆகியவையும் நவதிருப்பதிகள் கீழ் வரும் திருத்தலங்களே!  தென் திருப்பேரை சுக்கிரனுக்குரிய தலமாக வழிபடப் படுகிறது.

தல வரலாற்றிலிருந்து: 

பேரை என்பதற்கு "உடல்"என்பது பொருள்.  திரு(மகள்)வின் உடலோடு தவம் மேற்கொண்டு,  இத்தலத் திருமாலின் திருவருளால் (துர்வாசர் அளித்த) சாபம் நீங்கி, தனது பொலிவான வடிவை பூமிப்பிராட்டி மீண்டும் பெற்றதால் இத்தலத்திற்கு "திருப்பேரை"என்ற காரண பெயர் ஏற்பட்டது.  சோழ நாட்டில்“திருப்பேர் நகர்”என்ற திவ்ய தேசம் ஒன்று இருப்பதால் இத்தலமானது “தென் திருப்பேரை” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரு சமயம், பூமிப்பிராட்டி  நீராடும் போது, மீன் (மகரம்) வடிவில் பளபளப்பு மிகுந்த தங்கக் காதுக் குண்டலங்களைக் கண்டு, அதிசயித்து, அவை பெருமாளுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று எண்ணி, அவற்றை எம்பெருமானிடம் அளித்தார். அப்பரமனும் உவப்புடன் அக்குண்டலங்களை அணிந்து கொண்டான். அதன் அழகைக் கண்ட தேவர்கள் எம்பெருமானைப்  போற்றித் துதித்து மலர்மழை பொழிந்து வணங்கினர்.  திருத்தலத் திருமாலுக்கு  மகரநெடுங்குழைக்காதன் என்ற திருநாமம் உண்டானது.

ஸ்ரீதேவித்தாயார் குழைக்காதுவல்லி, கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில், தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார்.  பூமிப்பிராட்டிக்கும் தனிச்சன்னதி. திருப்பேரை நாச்சியார் என்ற திருநாமம். இத்தல உற்சவருக்கு நிகரில் முகில்வண்ணன் என்ற திருநாமம்.திருப்பேரை நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஒன்று.   ”வேதங்களின் ஒலியும் விழாக்களின் ஒலியும் விளையாடும் பிள்ளைகளின்  ஒலியும் இடைவிடாது ஒலிக்கும் ஊரான தென் திருப்பேரையில் சேர்வேன் நானே” என்று பிறிதொரு பாசுரத்தில் நம்மாழ்வார் அருளுவது அழகோ அழகு!!

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே,
புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழா ஒலியும்,
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் 

அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே

பாசுரத்தில் ஆழ்வார் சொன்னபடி, பிள்ளைகளின் விளையாட்டை ரசிப்பதற்காக, சற்றே ஒதுங்கியிருக்கும்படி பெருமாள் கருடனுக்கு கட்டளையிட, இத்தலத்தில் பெரிய திருவடி,  பெருமாளின் நேர் எதிராக சன்னதியில் இல்லாமல், சற்று  இடப்புறம் தனியாக இருக்கிறார் :-)

பாசுரப்பொருள்:

நானக் கருங்குழல் - வாசனை மிக்க கருமையான கூந்தல் கொண்ட
தோழிமீர்காள்! - தோழியர்களே!
அன்னையர்காள்! - அவர்களின் அன்னைமார்களே!
அயல் சேரியீர்காள் - (அக்கம்பக்கத்து) வெளித் தெருக்களில் வசிப்பவர்களே!
நான் இத் தனி நெஞ்சம் - (பேதையான) நான், சுயமாக (தன் விருப்பத்திற்கு) இயங்கும் (என்) மனதை

காக்க மாட்டேன் - கட்டுப்படுத்த இயலாதவளாய் இருக்கிறேன்!
என் வசம் அன்று இது - (என் உள்ளமான) இது (தற்சமயம்) என் வசம் இல்லை
இராப்பகல் போய் - இரவும், பகலும் (என்னைப்) பிரிந்து சென்று
தேன் மொய்த்த பூம்பொழில் - வண்டுகள் மொய்க்கும் மலர்ச்சோலைகளும்

தண்பணை சூழ் - குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த
தென் திருப்பேரையில் - தென் திருப்பேரை நகரில் 
வீற்றிருந்த - (கம்பீரத்துடனும், மிக்க பொலிவுடனும்) அமர்ந்துள்ள
வானப்பிரான் - இமையவர் தலைவனும், பரமபத நாயகனும் 

மணிவண்ணன் - அழகிய நீலமணி நிறத்தவனும் ஆன
கண்ணன் - (மாயக்) கண்ணனின் 
செங்கனி வாயின் - சிவந்த கனியொத்த அதரங்களின் (அழகில் மயங்கி)
திறத்ததுவே!(என் நெஞ்சமானது) அங்கு தங்கி விடுகிறதே! பாசுரக்குறிப்புகள்:

பராங்குச நாயகி பாவத்தில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி மற்றும் திருவிருத்தப் பாசுரங்கள், பக்தியையும், உயர் தத்துவத்தையும் உள்ளடக்கியதோடு,  நாயகியின் பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவித்துவம் மிக்க பாடல்கள்.

இன்ன பிற பாசுரங்களில் குயில், மயில், வண்டு ஆகியவற்றை விளித்து நாயகனான திருமாலுக்கு தூது விட்டுக் கொண்டிருந்த நாயகி, அவன் மனம் இரங்கவில்லையே என்ற ஆற்றாமையில், தனது தோழிமார்களையும், அன்னைமார்களையும், பிற சேரிகளில் உள்ளோரையும் அழைத்துப் புலம்புகிறாள்! எங்ஙனம்?

”பாருங்கள்! நீங்கள் கூறும் ஆறுதலை ஏற்க வேண்டிய என் நெஞ்சமே, சுயவிருப்பத்தின் பேரில், என்னை விட்டுப் பிரிந்து அப்பரமனின் சிவந்த அதரங்களின் அழகில் மயங்கி, அவன் வசம் சென்று, இரவு பகலாக, பேதலித்து நிற்கிறது!   ஆகையால், உங்கள் ஆறுதலால் எனக்குப் பயனில்லை” என்பதோடு தான் பெரும் வேதனையில் இருக்கையில், அத்தோழிமார்கள், நறுமணம் மிக்க, மலர் சூடிய கூந்தலோடு  (நானக் கருங்குழல்) அலங்காரமாக வலம் வருவதை மெல்லிய சர்காஸத்துடன் குறிப்பிடவும் மறக்கவில்லை :-)

அடுத்து,  வண்டுகள் ரீங்காரமிடும் தேன் மலர்ச் சோலைகளும், நீர் தளும்பும் குளிர் வயல்களும் சூழ்ந்திருக்கும் தன் நாயகன் வீற்றிருக்கும் இடமான தென் திருப்பேரையும் அத்தனை அழகு என்கிறாள்! அடுத்து நாயகனின் உயர் குணங்களை பட்டியலிடுகிறாள்.  அவன் வானவர்க்கே தலைவன் (தலைமைப் பண்பு), பரமபதத்தின் அதிபதி (அவனை விட்டால் உய்வு என்பதில்லை!), நீலமணிவண்ணன் (உடலழகு),  கோகுலக் கண்ணனாக அவதரித்தவன் (மாயைகளில் சிறந்தவன்),  சிவந்த மெல்லிய இதழ்களை உடையவன் (முக அழகு) என்றெல்லாம் போற்றி தன் காதலையும், ஆற்றாமையும் கவித்துவமாக எடுத்துரைக்கிறாள்.  Nammazhwar at his Best

--- எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails